காபி டே நிறுவன உரிமையாளரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா (60) கடந்த மாதம் 29-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே திடீரென மாயமானார்.
36 மணி நேர தீவிர தேடலுக்கு பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பின்னர் மங்களூரு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உடல் சிக்மங்களூருவில் உள்ள அவரது காபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறப்பை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துவந்து நிலையில், தற்போது அவரின் உடற்கூறாய்வு முடிவு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மங்களூரு மாநகர காவல் ஆணையர் ஹர்ஷா கூறும் போது, “பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி வி.ஜி.சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் சட்டப்பூர்வமாக வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டும் வரை, தொடர் விசாரணைகள் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.