உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், அங்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆன பிறகும் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்படாமல் அவரிடம் விசாரணை மட்டுமே காவல்துறையினர் நடத்தி வந்தனர். இந்நிலையில் நீண்ட பேராட்டத்திற்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். கடந்த நான்கு மாதமாக சிறையில் இருக்கும் அவர் பலமுறை ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் பலமுறை அவரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.