/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ni_0.jpg)
கர்நாடகா மாநிலம், சைதாப்பூர் அருகே ஜோலட்டா கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சைதாப்பூர் போலீசார், அன்னபூரணியின் உடலை மட்டும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், யாதகிரி மாவட்டம் முனகல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாவணகெரே பகுதியைச் சேர்ந்த அன்னப்பூரணியை(25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், நவீன் அன்னபூரணியை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அன்னபூரணி, தனது குழந்தையுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே, நவீன் தனது மனைவியை சமாதானப்படுத்த அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முயற்சித்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் அன்னபூரணியை அவரது பெற்றோர்களான பசவராஜப்பா (52) மற்றும் கவிதா (45) ஆகியோர் அழைத்துக் கொண்டு நவீனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சமாதானம் ஆன பின், அன்னபூரணியின் பெற்றோரை பஸ்ஸில் ஏற்றிவிட நவீன் தனது மனைவியுடன் காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
காரில் சென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம், நவீன் அன்னபூரணியின் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன், தனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு மனைவி, மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அவர், அவர்களை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், போலீஸுக்கு பயந்த நவீன், 3 பேரின் உடல்களையும் சைதாப்பூர் அருகே ஜோலட்டா கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனித்தனியாக வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவாயுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காட்டுப்பகுதியில் மீதமுள்ள, கவிதா மற்றும் பசவராஜப்பா ஆகியோர் உடல்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் நவீனைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)