வாக்கு வங்கியை பணத்தால், இலவசத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு தக்க நேரத்தில் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் புதிய அவதாரம் எடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் மேடை ஏறி இருக்கிறது. ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற மக்களாட்சி தத்துவத்தை சிதைக்கின்ற வேலையில் அவர்கள் இறங்கி உள்ளார்கள். புதுச்சேரியின் பாரம்பரியம், தன்மானம், சுயகவுரவத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கிறார்கள். பணத்தால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை அவர்களின் வெற்றிப்பாதையாக கணிக்கிறார்கள். கடந்த காலத்தில் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் எல்லாம் ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று முகம்சுளிக்கும் நிலையில் தான் உள்ளனர். இதற்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளும், தற்பொழுது புதுச்சேரியில் நிலவும் சூழ்நிலைகளுமே சாட்சியாக உள்ளன.
இந்த ஆட்சி நல்ல ஆட்சியாக இருந்தால் இந்திய ஜனநாயகத்தை ஆளக்கூடிய ஒரு கட்சியில் இருந்து கொண்டு இப்படி ஒரு வேலையை செய்வார்களா?. அரசியல் பார்வையாளர்கள் இது பாஜக–வின் பி டீம் என்று சொன்னாலும் கூட ஆளும் கட்சியில் கூட்டணியில் இருந்து கொண்டு இதுபோன்று பொதுவெளியில் செய்வது அழகல்ல. அரசியலுக்கும் புதுச்சேரிக்கும் சம்பந்தம் இல்லாதவரை அழைத்து வந்து மேடை ஏற்றி அவர்தான் எங்களின் அரசியல் வழிகாட்டி தலைவர் என்று சொல்வதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி அவர் காலில் விழுவதும் அரசியல் நாகரீகம் அல்ல. இச்செயல் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இச்செயலை புதுச்சேரி மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சலசலப்புகளை புதுச்சேரி மாநிலம் பலமுறை பார்த்திருக்கிறது. அதனால் வணிக அரசியலை மேடை ஏற்ற நினைக்கின்ற கோமாளித்தனமான செயலை புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கனவே குறுக்கு வழியில் இந்த மண்ணிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு கட்சியை கொண்டு வந்து, அதனால் இந்த மக்களுக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவர். ஜனநாயகத்தில் வாக்கு வங்கியை பணத்தால், இலவசத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் சக்தியோடு தக்க பாடம் புகட்டும்.
புதுச்சேரி மாநிலத்தை கபளீகரம் செய்து, பாழாக்குவதற்கு இண்டர் நேஷனல் சூதாட்ட களமாக்கவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச நடனங்களை அரங்கேற்றம் செய்யவும், தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் கொண்டு வந்து புதுச்சேரி மக்கள் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள அண்டை மாநில மக்களையும் படுபாதாளத்தில் தள்ளவும் திட்டமிட்டு புதுச்சேரியில் இந்த நாடகத்தை அரங்கேற்ற நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், வரும் தேர்தலில் லாட்டரி கொள்ளைப் பணத்தை தொகுதிக்கு பல கோடி வாரி இறைத்து ஆட்சியை அந்நியருக்கு அடகுவைக்க சிவப்பு கம்பளம் விரித்துள்ளார்கள். அரசியல் சகுனி விளையாட்டுக்களை வெற்றி பாதை என்று எண்ணி செயல்படும் ஆளும் கட்சி பி டீமின் செயல் புதுச்சேரி அரசியலையே கேலிகூத்தாக்கி உள்ளது.
கொள்கை ரீதியாக – அரசியல் சாசன ஜனநாயக கட்டமைப்பு மூலமாக மக்கள் இதயங்களை வென்று அரசியல் நடத்தும் நம்மை போன்ற கட்சிகள் இதை ஏற்காது. இப்படிப்பட்ட ஏமாற்று, பம்மாத்து வேலைகளை பி டீம் அரங்கேற்ற துடிக்கும் வேளையில் அதனை முறியடிக்க புதுச்சேரி மக்கள் தயாராக உள்ளனர் என்பதை அந்த வணிக கூட்டத்திற்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் புதுச்சேரி அரசியல் களத்தில் புகுந்து இருப்பதும் அதற்கு பாஜகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் என சுமார் ஆறு பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தி இருந்தனர்.
இது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது புதுச்சேரி மாநில திமுகவும் எதிர்ப்பை காட்டியுள்ளது.