குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா என்ற முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கலவர வழக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு மனோஜ் குல்கர்னி உட்பட 10க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என அகமதாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதில் மனோஜ் குல்கர்னி உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதனிடையே குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது ஆம் ஆத்மியின் வருகையால், தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. குஜராத் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் அதில் மீண்டும் வெற்றி பெற தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக பாஜக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட மனோஜ் குல்கர்னியின் மகள் பாயலின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுவும் நரோதா பாட்டியா சட்டமன்றத் தொகுதியில் பாயல் குல்கர்னி போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பல்ராம் தவானியை தவிர்த்துவிட்டு, மருத்துவரான பாயல் குல்கர்னியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. தனது மகளுக்காக மனோஜ் குல்கர்னி பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். தந்தை எந்தத் தொகுதி மக்களைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டாரோ, அதே நரோதா பாட்டியா சட்டமன்றத் தொகுதியில் மகள் போட்டியிடுவது அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.