இடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அந்த தீவிரவாதி என்றும் பேசினார். அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக வின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் இதனை உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என தெரிவித்தார்.
பிரக்யாவின் இந்த கருத்துக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரக்யாவின் இந்த கருத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் கூறினார். இதனையடுத்து பாஜக சார்பில் பிரக்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.