குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபூதி படேல் ராணிபா என்ற இளம்பெண். இவர், மோர்பி என்ற பகுதியில் ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் டைல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நிலேஷ் தால்சானியா (21) என்ற பட்டியலின இளைஞர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதியில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு, ரூ.12,000 மாதச் சம்பளம் தருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி திடீரென்று அவரை பணியில் இருந்து அந்த நிறுவனம் நீக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் தான் பணியாற்றிய 16 நாட்களுக்குண்டான சம்பளத்தை தருவார்கள் என நிலேஷ் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். இது பற்றி அந்த நிறுவனத்தில் அவர் கேட்டபோது அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன் தினம் (22-11-23) தனது சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் பவேஷ் படேல் ஆகியோருடன் நிலேஷ் அந்த நிறுவனத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவர்கள் மூவரையும், விபூதி படேலின் சகோதரர் ஓம் படேல் பெல்டால் தாக்கியதாகவும், உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் வந்த விபூதி படேல், அவர்கள் மூவரையும் நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிலேஷை தனது காலணிகளை காட்டி அதை வாயால் எடுக்க விபூதி படேல் ராணிபா வற்புறுத்தியும், சம்பளம் கேட்டதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நிலேஷ் மற்றும் 2 பேரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், விபூதி படேல் ராணிபா, ஓம் படேல் மற்றும் மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.