Skip to main content

அதிர வைத்த ஜெகன்மோகனின் முதல் கையெழுத்து!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக பதவி ஏற்றுக்கொண்டார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா கூட்டு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜயவாடா மாவட்டத்தில் இந்திரா மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்றனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் ஆந்திரா மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகன்மோகன் ரெட்டி.

 

jaganmohan reddy

 

 

அப்போது விழாவில் பேசிய ஜெகன் " ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 3000 வழங்கப்படும். இது தான் முதல்வர் அலுவலகத்தில் நான் இடும் முதல் கையெழுத்து என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய ஜெகன் ஆரம்பத்தில் ரூபாய் 2250 ஆக இருக்கும் தொகை படிப்படியாக உயர்த்தி மூன்று ஆண்டுகளில் ரூபாய் 3000 வழங்கப்படும் என உறுதிப்பட தெரிவித்தார். அக்டோபர்- 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றுக்குள் ஆந்திர மாநிலத்தில் சுமார் 1.6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதும் ஊழல் இல்லாத அரசாங்கம் செயல்படும். ஊழல் புகார்களுக்கென்று முதல்வர் அலுவலகத்தில் தனியாக கால் சென்டர் உருவாக்கப்படும்.

 

stalin and kcr

 

 

இதில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக புகார் அளிக்கலாம். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். ஓய்வூதியம் முதல் அரசு அறிவிக்கும் அனைத்து தொகைகளும் 72 மணி நேரத்திற்குள் பொது மக்கள் கைக்கு வந்து சேரும். ஆந்திர மாநிலத்தின் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என விழாவில் பேசிய ஜெகன் 6 முதல் 12 மாதத்திற்குள் அரசின் மீதான மாற்றத்தை மக்கள் உணர்வார்கள், மக்களிடம் அளித்துள்ள தேர்தல்  வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்". இவ்வாறு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்