Skip to main content

“சம்பளம் வேண்டாம்” - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan refused salary

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த மாதம் 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வாங்க மறுத்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். நலன்புரி ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற பிறகு ஒரு கூட்டத்தில் பங்கேற்று பவன் கல்யாண் கூறியதாவது, “முகாம் அலுவலகத்தை புதுப்பிப்பதற்காகவும் பழுதுபார்ப்புக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம், ஒன்னும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விடுங்கள் என்று சொன்னேன். புதிய மரச்சாமான்கள் எதுவும் வாங்க வேண்டாம், தேவைப்பட்டால் நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னேன்.

மூன்று நாட்கள் சபையில் கலந்துகொள்வதற்காக எனது சம்பளம் ரூ.35,000 தொடர்பான ஆவணங்களில் என்னிடம் கையொப்பம் பெற செயலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்தனர். ஆனால், நான் சம்பளம் வாங்க முடியாது என்று கூறிவிட்டேன். நான் அமைச்சராக இருக்கும் பஞ்சாயத்து ராஜ் துறையில் போதிய நிதி இல்லை என்பதால், அந்தச் சலுகைகளை மறுத்துவிட்டேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்