ஆந்திர மாநிலத்தின், மேற்குக் கோதாவரி பகுதியில் அமைந்துள்ள, 'எலுரு' மண்டலத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மக்கள், திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாயில் நுரை தள்ளுவதோடு மயக்கமடைந்தும் விடுகிறார்கள். இவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மர்மநோய் எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு குமட்டல், வலிப்பு மற்றும் மயக்கம் ஆகிய அறிகுறிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களில் சிலர் திடீர், திடீரென ஒலி எழுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எலுரில் பரவிவரும் மர்ம நோய்க்கு, பூச்சிக் கொல்லிகள் மற்றும் கொசு மருந்துகளில் பயன்படுத்தப்படும், 'ஆர்கனோக்ளோரிக்' என்ற வேதிப்பொருள் காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில், ஈயம் மற்றும் நிக்கல் ஆகிய கன உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துமனை, பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியில் நடத்திய சோதனையில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகிவுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில், ஈயம், நிக்கல் போன்ற உலோகங்கள் எப்படி வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.