மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக சமூக நல அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று (23.05.2023) இருபதுக்கும் மேற்பட்ட சமூக நல அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்று கூடினர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநரை கண்டித்த பதாகைகளைக் கையில் ஏந்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புக் கட்டை அமைத்து தடுத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் தலைமை தபால் நிலையம் முன்பே துணை நிலை ஆளுநர் தமிழிசையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு.ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகந்நாதன், தமிழர்களம் கோ.அழகர், மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ.சுகுமாறன், தமிழ் மீனவர்கள் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையர்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஸ்ரீதர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம் மற்றும் 20க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ' புதுச்சேரி மக்களின் உரிமைகளுக்கு எதிராக கருத்து கூறும் துணை நிலை ஆளுநர் தமிழிசையே புதுச்சேரியை விட்டு உடனே வெளியேறு!' என கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.