இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதிலும் உள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அகற்றப்படும் என ரயில்வே வாரிய தலைவர் உறுதியளித்துள்ளார்.
இன்று காலை உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள குஷிநகர் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச்சென்ற பள்ளி வாகனம், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 20 பேர் இந்த வாகனத்தில் பயணித்த நிலையில், 13 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கோரவிபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோகானி, ‘சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ரயில்வே ஊழியர் பள்ளி வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியும், ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் இயக்கியதுதான் விபத்துக்குக் காரணம். ஆளில்லா ரயில்வே கிராஸ்ஸிங்கில் இந்த ஆண்டில் ஏற்பட்ட முதல் விபத்து இதுவாகும்’ என தெரிவித்துள்ளார். மேலும், 2014ஆம் ஆண்டு முதல் ஆளில்லா கிராஸிங்குகளில் இதுவரை 109 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆளில்லா கிராஸிங்குகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அவை முழுமையாக அகற்றப்படும்’ என உறுதியளித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் யோகி, ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.