சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தும், அதற்காகப் போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச போலீசாரால், இன்று கைது செய்யப்பட்டார். விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற அகிலேஷ் யாதவ், அதற்காக லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால், விக்ரமாதித்யா சாலையிலேயே தடுப்புகளை ஏற்படுத்தி, அகிலேஷ் யாதவை கட்சி அலுவலகத்துக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். இதனால், சாலையிலேயே அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, போலீஸாருக்கும், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, அகிலேஷ் யாதவைக் கைது செய்து போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.