மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படாததால் 23வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், தான் வேளாண் குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், வேளாண் சட்டங்கள் குறித்து சில விவசாய சங்கங்கள் இடையே, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.
நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு எழுதிய கடிதத்தில், "நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டே வளர்ந்திருக்கிறேன். தவறான நேரத்தில் வரும் மழையின் துயரத்தையும், சரியான நேரத்தில் வரும் பருவமழையின் மகிழ்ச்சியையும் நான் கண்டிருக்கிறேன்.பயிர்களை விற்க வாரம் முழுவதும் காத்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
"நாட்டின் விவசாய அமைச்சராக, விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயிக்கும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமையாகும். விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமை” என்றும் அந்த கடிதத்தில் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்த பட்ச ஆதார விலைத் தொடரும். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலத்திற்கு பாதிப்பு வராது. பயிர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும் நிலத்திற்கு அல்ல எனவும், விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம். ஒப்பந்த அடிப்படையிலான விவசாயத்தை ஏற்கனவே பல மாநிலங்கள் அறிமுகம் செய்துவிட்டன. பல மாநிலங்களில் ஒப்பந்த விவசாயத்திற்கு சட்டங்கள் உள்ளன எனவும் அந்த கடிதத்தில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
நரேந்திர சிங் தோமரின் கடிதத்தை அனைத்து விவசாயிகளும் படிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.