ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில், புதிய ஆள்சேர்ப்பு முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்றும் வன்முறைப் போராட்டங்கள் தொடர்கின்றன.
ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பீகார் மாநிலம் லக்கிசராய் ரயில் நிலையத்தில் ரயிலுக்கு தீ வைத்தனர். உடனடியாக பயணிகள் வெளியேறியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டிகள் கொழுந்துவிட்டு எரிந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பலியா ரயில் நிலையத்தில் கடைகள் மற்றும் அலுவலகத்தைச் சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் ரயில் நிலையமே வன்முறை களமாகக் காட்சியளித்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் தீயைக் கட்டுப்படுத்தினர்.
'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்வதால், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த மாநிலங்களில் சில இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பீகார் மாநிலம், சாத்ரா என்ற இடத்தில் ரயில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில், இன்றும் பல இடங்களில் வன்முறை நீடிக்கிறது. 'அக்னிபத்' திட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தெலங்கானா மாநிலம், செகந்தராபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.