மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக பல்வேறு வகையான ஏவுகணைகளை தயாரித்தும், அவ்வப்போது அந்த ஏவுகணைகளை சோதித்தும் பார்க்கிறது.
அவ்வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ரக ஏவுகணைகளை தயாரிப்பதில் ராணுவ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டுகின்றனர்.20 மீட்டர் உயரமும், 17 டன் எடையும் கொண்ட அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
அக்னி-4 ஏவுகணை ஏற்கனவே 6 முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அக்னி-4 ஏவுகணை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கண்டது.
இந்த நிலையில் நேற்று 7-வது முறையாக அக்னி-4 ஏவுகணை சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் உள்ள நடமாடும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு அக்னி-4 ஏவுகணை செலுத்தப்பட்டது.அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன் மூலம் அக்னி-4 ஏவுகணையின் 7-வது சோதனையும் வெற்றிகரமாக அமைந்தது.