இந்தியாவில் கோவின் செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கோவின் செயலியில் இருந்து சுமார் 20 ஆயிரம் இந்தியர்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, கரோனா பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவை இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் செயலியில் இருந்து தரவுகள் கசியவில்லை எனவும், அனைத்துத் தரவுகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், கோவின் செயலி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனரின் முகவரியையோ, கரோனா பரிசோதனை முடிவையோ சேகரிப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தரவுகள் கசிந்ததாக வெளியான செய்தி குறித்து விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கோவின் செயலியில் ஒரு தொலைபேசி எண் மூலம் இனி ஆறு பேருக்கு தடுப்பூசி முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி சான்றிதழில் பயனருக்கு எத்தனை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதனைக் கோவின் செயலியில் உள்ள raise an issue-வில் சென்று மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.