கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் நேற்று ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எறிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். விசாரணையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், 90 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மார்ட்டின் காவல் நிலையத்தில் சரண் அடைவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தான் பேசிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அதில் அவர், “என் பெயர் மார்ட்டின். யெகோவா நடத்திய கன்சென்ஷனில் வெடிகுண்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நான், இந்த அமைப்பில் 16 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தேன். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்பு தவறான நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவர்களின் போதனைகள் அனைத்தும் நமது நாட்டுக்கு எதிரானது என்பதை உணர்ந்தேன்.
இதை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால், அதை அவர்கள் மாறாமல் தங்களின் கொள்கைகளை போதித்து வந்தனர். தேசிய கீதம் பாடக்கூடாது என்று குழந்தைகளிடம் போதிக்கிறார்கள். அவர்களுடன் சேரக்கூடாது, இவர்களுடன் உணவு உண்ணக்கூடாது என்று தவறான பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த பூமியில் பிறந்த அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் அழிந்து போக மாட்டார்கள், தொடர்ந்து வாழ்வார்கள் என்று போதனை செய்தார்கள்.
இதுபோன்ற பிரார்த்தனைகள், பிரச்சாரங்கள் நாட்டிற்கு தேவையில்லாது என்பதை உணர்ந்தேன். அவர்களின் கொள்கைகளை நான் எதிர்க்கிறேன். அவர்கள் இந்த நாட்டுக்கு தேவையில்லாதவர்கள் என நான் நினைக்கிறேன். அதனால் தான், இப்படி ஒரு முடிவை எடுத்தேன். குண்டு வெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்ற விபரங்களை ஊடகங்களிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ ஒளிபரப்பக்கூடாது. ஏனென்றால், சாதாரண மனிதர்களுக்கு அது தெரிந்தால் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கும்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.