நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இது, காங்கிரஸுக்கு பெரும் பின்னடவை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி கஜேந்திர சிங் ரஜு கேதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கடந்த 9ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது மத்திய பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுரேஷ் பச்சேரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று கூறிய காங்கிரஸ், இப்போது சாதியைப் பற்றி பேசுகிறது. கடந்த சில நாட்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்து அவர்கள் எடுத்த முடிவு என்னை கலக்கமடையச் செய்தது. அதில், குறிப்பாக, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்த விதம் எனக்கு ஏமாற்றமளித்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைய முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம், உத்தரப்பிரதேசத்தில் நேற்று (10-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சேரி வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி இயக்கும் கப்பலில் இருந்து அனைவரும் வெளியேறுவார்கள். மூத்த தலைவர்கள் உட்பட பலர், தேர்தலுக்குள்ளும் காங்கிரசை விட்டு வெளியேறுவார்கள். ராகுல் காந்தியின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் காங்கிரஸை கசப்பான முடிவை நோக்கியே கொண்டு செல்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி கட்சியில் இருக்கும் வரை காங்கிரஸை காப்பாற்ற முடியாது. ராமரைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் கட்சியில் யாரும் இருக்க விரும்பவில்லை. காங்கிரஸில் தொடர்ந்து நீடித்தால் தாங்கள் அழிந்து போவதை காங்கிரஸில் உள்ள பலர் உணர வேண்டும். ராமர் மீதான எதிர்ப்பின் மூலம் காங்கிரஸ் தனது அரசியல் அழிவின் நிலையையும், விரக்தியையும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இப்போது ராமர் எதிர்ப்பு மற்றும் சனாதன எதிர்ப்பு கட்சி. சனாதனத்திற்கு எதிராக நிற்பவர்களுடன் யார் நிற்பார்கள்?” என்று கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்த போது, ஆச்சார்யா பிரமோத், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.