பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, பாஜகவுடன் ஆட்சி அமைக்க சில நிபந்தனைகளை முன் வைத்தது. அதில் முக்கியானது இரண்டரை வருடம் முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்கு வேண்டும் என்பது, அதன்படி பாஜக ஒப்புக்கொண்டால் ஆதித்ய தாக்கரேதான் முதல்வராவார் என்று கூறப்பட்டது. இந்த நிபந்தனைக்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் சரத்பவார் உதவியுடன் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்துள்ளது.
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவிற்றுள்ளார். ஆதித்ய தாக்கரேவுக்கு இந்த அமைச்சரவையில் இடம்பெறுவாரா? என்ற கேள்வி பரபரப்பாக பேசப்படுகிறது. தந்தை உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், மகன் அதே அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தால் இருவரும் பதவி ஆசைப் பிடித்தவர்கள் என்று விமர்சனம் செய்வார்கள். ஆகையால் ஒரே அமைச்சரவையில் இருவரும் இடம் பெறுவது சரியாக இருக்காது என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதே நேரத்தில் நிழல் முதல்வராக இருந்து ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரத்பவார் உதவியுடன் 3 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டோம். இந்த 3 கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து ஐந்து வருடங்கள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். ஆகையால் சிவசேனா கட்சி எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் கட்சி மேலிடத்திலும், கூட்டணிக் கட்சிகளிடமும் அதிருப்தி அடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆதித்ய தாக்கரேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றதால், கட்சிப் பணிகளில் அவரால் அதிகம் கவனம் செலத்த முடியாது என்பதால், கட்சியை வளர்ப்பது, மேலும் மாநிலம் முழுவதும் சென்று கட்சிப் பணியாற்றுவது என கட்சியின் பல்வேறு பொறுப்புகள் ஆதித்ய தாக்கரேவுக்கு வரவுள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.