ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு (வயது 87) சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிடெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானாவின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை இருந்துள்ளார். ஓம் பிரகாஷ் சவுதாலா இந்திய தேசிய லோக்தளத்தைச் சேர்ந்த ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆறாவது துணைப் பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.
மத்தியப் புலனாய்வுத் துறையின் எஃப்ஐஆர் படி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதலமைச்சராக கடந்த 1999- ஆம் ஆண்டு ஜூலை 24- ஆம் தேதி முதல் 2005- ஆம் ஆண்டு மார்ச் 5- ஆம் தேதி வரை செயல்பட்டபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1,467 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல வளாகங்கள், குடியிருப்புகள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பம்புகள் மற்றும் பிற நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று (27/05/2022) வெளியான நிலையில், வருமானத்தை விட 189.11 சதவீதம் கூடுதலாக இவர் தன் பெயரிலும், தனது குடும்பத்தினரின் பெயரில் சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் ஏற்கனவே பத்தாண்டு சிறை தண்டனைக்கு ஆளானவர் என்று குறிப்பிடத்தக்கது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவரது நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையின் பழைய அறையில் அடைக்கப்பட்டார் ஓம் பிரகாஷ் சவுதாலா.
ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தற்போது, ஹரியானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.