திரிபுரா மாநிலம் உனக்கோடி மாவட்டத்தில் குமார்கட்டில் ஜெகன்னாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் ரத யாத்திரை திருவிழா கடந்த வாரம் முதல் தொடங்கி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ரதம் என ரதங்கள் அனைத்தும் நேற்று கோவிலுக்கு திரும்பியுள்ளது. இந்த ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பிடித்து இழுத்து வந்துள்ளனர்.
அந்த நேரத்தில், இரும்பால் ஆன இந்த ரதம் மேலே சென்ற மின்கம்பியில் உரசியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில் ரதத்தை இழுத்த 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் பக்தர்கள் 15 பேர் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி காயமடைந்துள்ளனர். காயமடைந்த 15 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே, மின்சாரம் தாக்கி பலியான பக்தர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சகா தெரிவித்தார். மேலும், அவர் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.