![5 state elections Preparations are intensive](http://image.nakkheeran.in/cdn/farfuture/PXLHL-pN1vS9au4ej8tgqA6IU0ZnzjUrQOU5kkwbpMA/1694500545/sites/default/files/inline-images/eci_3.jpg)
இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரும், துணை ஆணையர்களும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் ஆணையர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அதே சமயம் இம்மாத இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையர்கள் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரத்தில் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.