Skip to main content

வரலாறு படைத்த இந்தியா - நொடிக்கு 488 பேர், நிமிடத்துக்கு 28 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

ரக

 

இந்தியாவில் நேற்று (17.09.2021) ஒரே நாளில் 2.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக மத்திய அரசு செய்துவந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று மதியம் 1 மணி அளவில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மாலையில் அந்த எண்ணிக்கை 2 கோடியை தொட்டது.

 

இரவு எட்டு மணிவரை நீடிக்கப்பட்ட தடுப்பூசி முகாம் நிறைவில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் மத்திய அரசு வெளியிட இருக்கிறது. ஆனால், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தன்னுடைய ட்வீட்டில், " வாழ்த்துகள் இந்தியா, இன்றைக்குத் தடுப்பூசி செலுத்துவதில் புதிய உலக சாதனை செய்துள்ளோம்" என்று தெரிவித்திருந்தார். கடந்த மாதம் சீனா ஒரே நாளில் 2.47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நிலையில், தற்போது இந்தியா அதனை முறியடித்துள்ளது. நேற்றைக்கு நொடிக்கு 488 பேர், நிமிடத்துக்கு 28 ஆயிரம்  பேர் என்ற அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்