ரயில்வே பாதுகாப்புப் படை வீரராக இருந்தவர் சேத்தன்சிங் சவுத்ரி. இவர் கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணித்து அந்த ரயில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை அருகே உள்ள பால்கர் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த சேத்தன் சிங் சவுத்ரி, தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனது உயர் அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் திகாராம் மீனாவை சுட்டார்.
மேலும், அங்கிருந்த மற்ற 3 பயணிகளையும் கொடூரமாகச் சுட்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ரயிலில் இருந்து தப்பி ஓட முயன்ற சேத்தன் சிங்கை பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை மும்பை போரிவிலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ரயில்வே காவல்துறையினர் நேற்று (20-10-23) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சேத்தன்சிங்கிற்கு எதிரான 1206 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதற்கிடையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அவர்கள் அளித்த அந்த மனுவில், ‘விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியான சேத்தன்சிங்கை இங்குள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், அவரை காணொளி மூலமாக ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ஷெசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.