
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்த சம்பவம் ஹைதராபாத்தை உலுக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் இன்று (18-05-25) அதிகாலை 5:30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ, கட்டிடம் முழுவதும் வேகமாகப் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், 11 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர விபத்தில், சிக்கிய பலரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது வரை பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் 17 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.