
நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட, திருவோனம் கிராமம் அருகே நெய்வேலி தென்பாதி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில், நாட்டு வெடி குடோன் ஒன்று அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நெய்வேலி தென்பாதி கிராமத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், நாட்டு வெடிகளை அதிகமாக தயாரித்து குடோனில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் இன்று (18-05-25) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குடோனில் வெடி விபத்து ஏற்பட்ட சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது, குடோனில் இருந்த இரண்டு பேர் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனையடுத்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, சம்பவ விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குடோனில் ஏற்பட்ட தீயை, பெரும் முயற்சிக்கு பிறகு அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் 18 வயதான ரியாஸ் உள்பட இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.