இந்தியாவில் ஒமிக்ரான் வகை கரோனாவால் மூன்றாவது அலை ஏற்பட்டு கரோனா பரவல் வேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதர பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதிற்கும் மேற்பட்ட இணைநோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார்.
இதனைதொடர்ந்து ஜன்வரி 10 ஆம் தேதி முதல், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி தேவையா என்பது குறித்து நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆலோசிக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை வைத்தே, தற்போதைய சூழலில் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.