இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
மராட்டியம் கரோனா பாதிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தற்போது கணிசமான அளவில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றது. குறிப்பாக ஆந்திராவில் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. தினமும் 1000க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பு அம்மாநிலத்தில் பதிவாகி வருகின்றது.
ஆந்திர முதல்வர் இந்த கரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு அவர் கரோனா நிவாரணம் வழங்கியுள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் கரோனாவால் உயிரிழப்போரின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்காக ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.