நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மாநிலத்திற்கு போதுமான நிதியினை அளிக்காமல் வஞ்சிக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகார வரம்பு மீறுகிறார். எனவே புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மாநில வளர்ச்சிக்கு தடையாக செயல்படும் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசியல் கட்சிகள் சார்பாக டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்கும்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி ஆளும் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்பட 21 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 380 பேர், காரைக்காலில் இருந்து 40 பேர் என மொத்தம் 420 பேர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லி சென்றவர்களை தலைவர்கள் வரவேற்று பேருந்துகள் மூலம் விடுதிகளுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நேற்று காலை 11 மணிக்கு தொண்டர்கள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, திமுக அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக கபிரியேல், மற்று கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய்தத், குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீத்தாராம்யெச்சூரி, டி.கே.ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தியும், கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆங்கிலத்தில் தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
புதுச்சேரி அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், கந்தசாமி, எம்.எல்.ஏக்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனவேலு, தீப்பாய்ந்தான், பாலன், டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், இந்த போராட்டத்தில் புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.