கோவில் வழிபாட்டுக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த பக்தர்கள் விபத்தில் பலியான சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் பயணம் செய்த காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட12 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் 2 கார்களில் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். அங்குள்ள ராம்தேவ்ரா, கர்ணி மாதா கோவில்களில் வழிபட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, ராஜஸ்தானில் பிகானிர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் நாகார் என்ற இடத்தில் உள்ள ஒரு சாலையோர கடையில் கார்களை நிறுத்தி டீ அருந்திவிட்டு, பின்னர் புறப்பட்டுள்ளனர். அதில் ஒரு கார் வேகமாகச் சென்றதால், அப்போது எதிரே வந்த லாரியுடன் அந்த கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், காரில் சென்ற பக்தர்கள் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தானில் சாலை விபத்தில் இறந்த மத்தியப்பிரதேச பக்தர்களுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.