இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதே சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களிலும் நேற்று முன்தினம் (27-02-24) மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று முன்தினம் (27-02-24) நடைபெற்றது. அதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையே, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் நேற்று (28-02-24) காலை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக நேற்று (28-02-24) சட்டசபை கூடியது. அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் உடனடியாக இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்று, ராஜினாமா செய்வதாக அறிவித்த விக்ரமாதித்ய சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு, தனது ராஜினாமா கடிதத்தை, விக்ரமாதித்ய சிங் திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 6 பேரின் பதவியும் பறிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மொத்தம் 68 இடங்களை கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகுதி நீக்கத்தால் சட்டப்பேரவை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையைவிட கூடுதலாக காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியானது காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.