இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
கரோனாவுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மருந்துக்குப் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 10 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நேற்று (21/04/2021) வழங்கியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு 2.69 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளும், குஜராத் மாநிலத்திற்கு 1.43 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு 1.22 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளும், டெல்லிக்கு 61,825 குப்பிகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு தலா 58,881 ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
38 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதனை 74 லட்சம் குப்பிகளாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய கூடுதலாக 20 ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.