Skip to main content

ஸ்டெர்லெட் போராட்டம் போர்க்களமானது ஏன்? துப்பாக்கி சூடு பின்னனி விவரம்..!

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

 

 


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் உள்ளிட்ட 21 கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் இன்று 100வது நாளை எட்டிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்திர தடைவிதிக்கக் கோரி தூத்துக்குடி முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும், பழைய பேருந்து நிலையம் ஏதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து 21 கிராம மக்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் தூத்துக்குடி சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றாக இணைந்து பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற பொதுமக்களை ஒவ்வொரு பகுதியிலும் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி போராட்டகாரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது கல்வீசி பதில் தாக்குதல் நடத்திய போராட்டகாரர்கள் போலீசாரின் வாகனத்தையும் கவிழ்த்துப் போட்டு சேதப்படுத்தினர். போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வாகனத்தையும், போலீசாரையும் விரட்டி அனுப்பினர். இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். தொடர்ந்து திட்டமிட்டப்படி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நுழைந்தனர்.

அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், போலீசாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போலீசார் திணறினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை போராட்டக்காரர்கள் நெருங்கினர். இதனிடையே 70 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த போராட்டகாரர்கள் போலீசாரின் கடும் நடவடிக்கையை கண்டு அஞ்சி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் போது 25 ஆயிரமாக எண்ணிக்கை குறைந்தது. அப்போது அங்கும் போலீசார் அவர்களை நுழைய விடாமல் தடுத்து லத்தி சார்ஜ் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆனால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல 6 வழிகள் உள்ளதால் மாற்று வழியில் போராட்டகாரர்கள் ஆட்சியர் அலுவலகம் உள்ளே புகுந்தனர்.

 

 


தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் புகுந்த போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அந்த நேரத்தில் அலுவலகத்தில் இல்லை. அவரது உதவியாளர் தியாகராஜன் மட்டுமே அலுவலகத்தில் இருந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மேலும் அலுவலகத்தில் இருந்த பணியாளர்களையும் போலீசார் பத்திரமாக வெளியேற்றினர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் ஆட்சியர் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சென்ற போராட்டகாரர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட கார்களுக்கு தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து போராட்டகார்கள் ஸ்டெர்லைட் ஆலை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து எஸ்.பி அலுவலகம் திரும்பி சென்றுகொண்டிருந்தனர். அப்போது பெரும் அளவில் மக்கள் திரண்டதாலும் குறைந்த அளவிலான போலீசாரே இருந்ததாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார், ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் உத்தரவின் பேரில் எஸ்.பி அலுவலகம் நோக்கி வந்த போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து 15க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகச்சை பெற்று வருகின்றனர்.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் பகுதியில் தான் அடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் முழங்காலுக்கு கீழ் யாரையும் சூடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தங்களின் நியாமான கோரிக்கைக்காக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்களை போலீசார் சரமாரியாக சுட்டுகொன்ற சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்