![](http://image.nakkheeran.in/cdn/farfuture/D6CWq1HW5F-f2_a5oGZSf6oLxUFsSbhrToDaweMPdn8/1604268037/sites/default/files/styles/370x370/public/2018-06-24/1529584973_thalapathy-62-first-look-vijay-ar-murugadoss-film-titled-sarkar%20-%20Copy%20-%20Copy.jpg?itok=OVjaZo36)
சர்கார் திரைப்படத்தின் புகைபிடிக்கும் போஸ்டர் விவகாரத்தில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்டோர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்படிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு இழப்பீடு கோரி சென்னையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சர்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இது இளைஞர்களை தவறான பாதையில் கொண்டுசெல்லும். நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், அவர்களும் விஜயை பின்பற்றி புகைப்பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். ஏற்கனவே புற்றுநோயின் அளவானது அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு பிரபலமான நடிகர் தீய பழக்கத்தை கையாள்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டால், அவரை பின்பற்றும் ரசிகர்களும் அதே பழக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். ஏனவே இது போன்ற காட்சிளை இடம்பெற செய்த நடிகர் விஜய், முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தலா ரூ.10கோடி இழப்பீடு வசூலிக்க வேண்டும்.
அப்படி இழப்பீடு பெறும் அந்த தொகையை வசூலித்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு தர வேண்டும் என புகார்தாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனம் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.