
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன்-உமாசங்கரி ஆகியோரின் மகள் அக்ஷயாவுக்கும், நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்த சுகுமார்- கமலேஸ்வரி ஆகியோரின் மகன் முத்து பாண்டிக்கும் திருமணம் இன்று காலை ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவின் படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு சாதகமான அம்சங்கள் இடம் பெற்று ள்ளதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஓராண்டாக எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தாண்டி சரியான பாதையில் ஆட்சி செய்து வருகிறோம். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எண்ணியவர்களின் கனவு கானல் நீரானது.
இவ்வாறு கூறினார்.