தமிழக அரசு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைப் படுகொலைச் செய்துள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்தப் பகுதி மக்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று முற்றுகைப்போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். மக்களின் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரைப் படுகொலைச் செய்துள்ளது. இன்னும் சிலர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுச்சூழல் அமைப்பினரும் போராடிக்கொண்டிருந்த நிலையில் அதன் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்தது. சிப்காட் தொழிற்போட்டை அமைக்கப்போவதாக பொய் சொல்லி இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு உடந்தையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு நெருக்கமான ‘வேதாந்தா’ நிறுவனத்தால் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதியின் பொதுமக்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பது நிருபணமாகியுள்ளது. தமிழ் மக்களின் உயிரைத் துச்சமாக நினைத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு உதவத் துடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்கவேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும், போலீசார் மீது கொலை வழக்கு பதிவுசெய்யவேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.