தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வரின் அறிவிப்பில், "வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்றும் (22/05/2021) நாளையும் (23/05/2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து "இன்றும், நாளையும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து இரவில் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக சென்னையில் மாநகர பேருந்துகளும் இயக்கப்படும். நாளை (23/05/2021) சென்னையில் இருந்து மதுரைக்கு கடைசி பேருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு கடைசி பேருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்படும். நெல்லைக்கு இரவு 08.00 மணிக்கும், தூத்துக்குடிக்கு இரவு 07.00 மணிக்கும் கடைசிப் பேருந்து இயக்கப்படும். இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும்" என்று தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.