கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன். சிகிச்சை அளித்து வரும் ரேலா மருத்துவமனை நிர்வாகம், நேற்று அறிவித்த அறிவிப்பில், 'முன்னேற்றம் அடைந்திருந்த அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. கவலைக்கிடமாக இருக்கிறார் ' என தெரிவிக்கப்பட்டது.
அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிந்த, தெலுங்கான கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்திரராஜன் , ஹைதராபாத்தில் இருந்து கரோனாவுக்கான முக்கிய மருந்தினை வாங்கி ரேலா மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். கரோனாவுக்கான முதல் மருந்து கண்டுப்பிடிப்பை ஹைதராபாத் கண்டறிந்துள்ளது. அந்த மருந்தினைத்தான் தெலுங்கானா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஹைதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினைத்தான் தெலுங்கானா அரசு கொடுத்து வருகிறது. அமெரிக்க மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த மருந்தினை மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், ரேலா மருத்துவமனை நிர்வாகம் வைத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக அந்த மருந்தினை அனுப்பி வைத்து உதவி செய்துள்ளார் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்.