Skip to main content

சிறப்பு செயலாளர் பதவி விவகாரம் - ஆளுநரின் செயலாளருக்கு நோட்டீஸ்!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
tn

 

தமிழக சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணை செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  விதிகளை மீறி ’சிறப்பு செயலாளர்’ பதவியை உருவாக்கி அனுபவம் இல்லாதவரை நியமித்துள்ளதாக வழக்கு மனுவில் புகார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், பேரவை சிறப்பு செயலாளரை நியமிக்க எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கூடாது என்று அரசு தரப்பு வாதிட்டது.  இதன் பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும், பேரவை சிறப்பு செயலாளர் சீனிவாசன் நியமனத்திற்கு எதிரான வழக்கில் ஆளுநரின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் எல்.எஸ்.வசந்திமலர், இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  ‘’தமிழக சட்டப் பேரவையில் பணியாற்றும் ஊழியர்கள் நியமனம் தமிழ்நாடு சட்டப் பேரவை சர்வீஸ் விதிகள் 1955ன் கீழ்தான் நடைபெற வேண்டும். இந்த  நியமனத்தில் முதல்நிலை பணிகளுக்கான நியமனத்தை ஆளுநர் மட்டுமே செய்ய முடியும். 

 

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தமிழக சட்டப் பேரவையின் சிறப்பு செயலாளராக பேரவைத் தலைவரின் தனி உதவியாளராக பணியாற்றி  வரும் கே.சீனிவாசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் செயலாளர்களாக பதவி வகித்து வருபவர்கள் மட்டுமே பேரவைச் செயலாளராகவோ, பேரவை சிறப்பு செயலாளராகவோ பதவி உயர்வு பெற முடியும்.  பணி மூப்பு அடிப்படையில்  தற்போது பேரவைச் செயலாளராக பதவி வகித்து வரும் பூபதி வரும் 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவியைப் பெற சட்ட  விதிகளின்படி மனுதாரர் வசந்திமலருக்கு முழு உரிமை உள்ளது.

 

 பேரவை கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே பேரவைச் ெசயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது  விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், விதிகளுக்கு முரணாக பேரவைச் செயலாளரின் தனி உதவியாளர் என்ற அடிப்படையில் சீனிவாசனுக்கு பேரவை  சிறப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, சட்ட விரோதமான இந்த நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இடைக்கால உத்தரவாக சிறப்பு  செயலாளர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.

 

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 1 -ம் தேதிக்கு  தள்ளிவைத்தார். இவ்வழக்கின் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் ஆளுநரின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

சார்ந்த செய்திகள்