நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக கடந்த 7ம் தேதி இந்த மசோதாவை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. தங்களது ஆதரவு, கருத்துகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் தெரிவிக்கவும் கெடு விதித்துள்ளது. மானிய விலையில் மின்சாரம் வழங்குவதை தவிர்த்து நேரடியாக மானியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதிகளையும் பரிந்துரை செய்துள்ளது.
இந்த புதிய சட்ட திருத்தத்தினால் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு அதிகாரத்தின்கீழ் இருக்கும் மின்துறை மத்திய அரசின் கீழ் செல்லும். கிட்டதட்ட 30 வருடங்களாக விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள், குடிசை வீட்டில் வசிப்போர் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்த இலவச மின்சாரமும், முதல் 100 யூனிட் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. 2015ல் இதே மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தபோது திமுக அதை எதிர்த்தது, கலைஞர் இது மாநில அரசுகளின் உரிமையைப்பறிக்கும் செயல் எனக் கூறினார்.
இச்சட்டத்தின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார விநியோக நிறுவனங்களை அமைக்கப்படும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அந்ததந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் அந்தந்த பருவங்கள், உற்பத்தி போன்றவைகளைப்பொறுத்து மின்சாரக் கட்டணம் அமைக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார பயன்பாட்டை கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.