நக்கீரன் ஆசிரியரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுப்பு தெரிவித்தார். வழக்கில் இருந்து ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார். ஐபிசி 124 பிரிவின் கீழ் நக்கீரன் ஆசிரியர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் நீதிபதி.
தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன், நக்கீரன் இதழின் ஏப். 22 இதழில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு கட்டுரை வெளியாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் மீது பிரிவு ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நக்கீரன் ஆசிரியர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஊடக பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் நேரில் ஆஜராகி 124 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக வாதாடினார்.
ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் மாஜிஸ்திரேட் கோபிநாத். வழக்கில் இருந்து ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் ஆசிரியர், ‘’ ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி நக்கீரனுக்கு வருகிறது. அதை நாங்கள் புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அதற்காக கைது செய்யப்பட்டேன். இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது. இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி. என் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைத்து ஊடகத்துறையினருக்கும், தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நக்கீரனின் பணி தொடரும்’’என்று தெரிவித்தார்.