
அக்டோபர் -5ம் தேதி வரை கருணாஸை நீதிமன்றக்காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார். கருணாஸ் மீது போடப்பட்ட 7 பிரிவு வழக்கில் 307 பிரிவுக்கு முகாந்திராம் இல்லை என்று கருணாஸ் வழக்கறிஞர் வாதாடியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அந்த பிரிவை மட்டும் அதாவது கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தார்.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக அவர் மீது கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை கருணாசை கைது செய்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். கருணாஸுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கருணாஸ் மற்றும் அவருடன் கைதான இருவரையும் விசாரணைக்கு பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பின்னர் கருணாஸையும், அவருடன் கைதானவரையும் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.