Skip to main content

நாடாளுமன்றத்தில் ஒலித்த ‘ஜெய் பீம்’ முழக்கம்; பிரதமரின் அவசர விளக்கம்!

Published on 18/12/2024 | Edited on 18/12/2024
Prime Minister's explanation about amit shah's ambedkar issue

இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று (17-12-24) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார். 

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியிருந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள், அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால், நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளும் இன்று (18-12-24) 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Prime Minister's explanation about amit shah's ambedkar issue

இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தை மேம்படுத்த எங்கள் அரசு பாடுபட்டுள்ளது. பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் இருந்தது. எங்கள் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்தது மட்டுமல்லாது, நான் அங்கு பிரார்த்தனை செய்யச் சென்றேன். டாக்டர் அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை, எங்களது மரியாதையும் பயபக்தியும் முழுமையானதாக இருக்கிறது.

நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தான் காரணம். கடந்த பத்தாண்டுகளாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, எங்களது அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தை வலுப்படுத்துவது, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற நமது அரசின் முதன்மைத் திட்டங்களான எந்தத் துறையாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைத் தொட்டவை.

Prime Minister's explanation about amit shah's ambedkar issue

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் அம்பேத்கரை அவமதித்தது மட்டுமல்லாமல் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களைப் புறக்கணித்த காங்கிரஸின் இருண்ட வரலாற்றை அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் அவர்கள் திகைத்து திகைத்துவிட்டார்கள், அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும். காங்கிரஸ் விரும்பியபடி அவர்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அவர்களின் ஆட்சியில்,  பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை.

டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் பாவங்கள் செய்தது. அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது. நேரு, அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது இழப்பை கௌரவப் பிரச்சினையாக ஆக்கினார். அவருக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் வைக்க மறுக்கப்பட்டது. காங்கிரஸும், அதன் கூட்டணிகளும் தங்களின் பொய்களால் பல வருடங்களாக அவர்கள் செய்த தவறுகளை, குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அவர்கள் மிகவும் தவறாக நினைக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்