Skip to main content

அரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் 2,264.74 கோடி திட்ட ஊழல்... மறைக்க படாதபாடு படுகிறார் அமைச்சர் வேலுமணி... தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு அறிக்கை!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

Velumani


"கமிஷன்" என்ற “கரன்சி மழையில்” குளிர் ஜூரம் வரும் அளவிற்கு நனைந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நல்லாட்சி நடத்திய தி.மு.கழகம் குறித்தோ "உள்ளாட்சியில் நல்லாட்சி" கண்ட எங்கள் கழகத் தலைவர் குறித்தோ விமர்சிக்க எவ்விதத் தார்மீக உரிமையோ அருகதையோ இல்லை!". "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு; “கமிஷன்” ஒன்றையே மனதில் வைத்துத் தனது “கரப்ஷனை” மறைத்திருப்பது பதிலறிக்கை அல்ல; பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட உதவாக்கரை அறிக்கை!" என சட்டப்பேரவை தி.மு.க. கொறடாவும் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பான புள்ளிவிவரங்களைச் சொல்கிறார்” என்று எங்கள் கழகத் தலைவர் பற்றி விமர்சனம் செய்து- தனது துறையில் அரங்கேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் 2264.74 கோடி ரூபாய் திட்ட ஊழலை மறைக்க உள்ளாட்சி அமைச்சர் திரு. வேலுமணி படாத பாடு பட்டிருப்பதை அவரது 10 பக்க அறிக்கையில் காண முடிகிறது.


எங்கள் கழகத் தலைவர் எழுப்பிய எந்தப் புள்ளிவிவரத்தையும் அவரால் அந்த அறிக்கையில் மறைக்க முடியவில்லை. “பதில்” என்ற பெயரில் ஏதோ உளுத்துப் போன வாதங்களையும், பொய்யாகி- பொது வெளியில் தோற்கடிக்கப்பட்ட “பழங்கதைகளையும்” எடுத்து வைத்து- தன்னை ஊழலில் இருந்து தற்காத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.


இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் திரு. மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ் 10.6.2020 அன்று வெளியிட்டிருக்கும் செயல்முறை ஆணையில் 2,264.74 கோடி ரூபாய்தான் “வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும்” பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரின் அறிக்கையில் 2,374.74 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரி ஆணை பிறப்பித்து 30 நாட்களுக்குள் திடீரென்று 110 கோடி ரூபாய் எப்படி உயர்ந்தது?


எங்கள் கழகத் தலைவர், “குடிநீர்க் குழாய் வழங்கும் பணிகள் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பாக இருக்கிற போது அதற்கான நிதியை ஏன் ஊராட்சி மன்றத்திடம் கொடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு அமைச்சர் “10 லட்சத்திற்கு மேலான நிதி செலவில் உருவாகும் திட்டங்களை மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையின் மூலமே வழங்க வேண்டும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் கோருகிறோம்” என மூக்கைச் சுற்றி பதில் சொல்லியிருக்கிறார். “ஊராட்சி மன்றத்திடம் நிதியைக் கொடுங்கள்” என்று எங்கள் தலைவர் கேட்டதற்கும் மின்னணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் ஏன் ஒரு “பதிலறிக்கை”? 


மின்னணு ஒப்பந்தம் என்றால் “ஏற்கனவே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் எடுத்து வேலை செய்தவர்கள்தான் இதில் ஒப்பந்ததாரர்கள் ஆக முடியும். அதனால்தான் மாவட்ட அளவில் டெண்டர் விடுகிறோம்” என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவிப்பதன் மர்மம் என்ன?


ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தில் நடைபெறவிருக்கும் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி வாரியாக மின்னணு டெண்டர் விட்டு - ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் கடந்த காலங்களில் கான்டிராக்ட் எடுத்த எந்த ஒப்பந்ததாரர் வேண்டுமானாலும் டெண்டர் போடலாம் என்று வெளிப்படையாக அமைச்சர் அறிவிக்கத் தயாரா?


“வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணி ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்துப் போட வேண்டும்” என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். மாவட்ட அளவில் வெளியிடப்படும் டெண்டருக்கான ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்திட வேண்டும். ஆனால் நிதியை மட்டும் ஊராட்சி மன்றத்திற்குக் கொடுக்கமாட்டேன் என்பது என்ன வகை அராஜகம்?


ஊராட்சி மன்றத் தலைவர்களை நம்பவில்லை என்றால்- இந்த டெண்டர் ஒப்பந்தங்களில் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறிட அமைச்சருக்குத் துணிச்சல் இருக்கிறதா?


அமைச்சர் தனது அறிக்கையில் இன்னொரு விளக்கமாக, “ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சித்துறைப் பொறுப்பு அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகிய மூவரும் பார்வையிட்ட பிறகே பணிக்கான நிதி விடுவிக்கப்படும்” என்கிறார். “நிதியையே ஊராட்சி மன்றத்திற்கு நேரடியாக ஒதுக்க மாட்டேன்” என்கிற உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏன் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும் என்கிறார்?


அதற்குப் பதில் மாவட்ட ஆட்சித் தலைவரே பணிகளைப் பார்வையிட்டு- அவரே கையெழுத்திட்டு வேலைக்குரிய பணத்தைக் கொடுத்து விடலாம் என்று உத்தரவிடலாமே!


ஆகவே, “மாவட்ட அளவில் டெண்டர் விடப்படும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும்; பணியைப் பார்வையிட்டு கையெழுத்துப் போட வேண்டும்; ஆனால் நிதியை மட்டும் நேரடியாக ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கீடு செய்ய மாட்டோம்” என்று கூறுவதைத்தான் எங்கள் கழகத் தலைவர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் போக்கு மட்டுமல்ல; உள்ளாட்சி மன்றங்களின் நிதி ஆதாரத்தையும் அபகரிக்கும் போக்கு- மாவட்ட அளவில் ஒரே இடத்தில் “கமிஷன்” அடிக்கும் ஊழல் தந்திரம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

 

http://onelink.to/nknapp

 

அதற்கு முறையான பதிலை அளிக்க முடியாத உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. வேலுமணி- “கமிஷன்” ஒன்றையே மனதில் வைத்து தனது “கரப்ஷனை” மறைத்திருப்பது பதிலறிக்கை அல்ல; பதற்றத்தில் ஊழலை மறைக்க வெளியிட்ட- உதவாக்கரை அறிக்கை!


ஆகவே, ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் பணிக்கு அந்தந்த ஊராட்சி மன்றத்திற்கு நிதியினை வழங்கிட வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் கூறியதை நிறைவேற்றவில்லை என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தை நாடும் என்பதில் சந்தேகம் இல்லை. “ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணி செய்தவர்தான் இந்த டெண்டரில் பங்கேற்க முடியும்” என்று “சப்பை”க் காரணம் கூறி- அ.தி.மு.க. ஆட்சியில் “முறைகேடுகளின்” மொத்த உருவமாக மாறிவிட்ட மின்னணு டெண்டரை காரணம் காட்டி மாவட்ட அளவில் விடுவதைக் கைவிட வேண்டும். ஏறக்குறைய 10 வருடமாக- தமிழகத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளும் வகையில் கொள்ளையோ, கொள்ளையென்று அடித்துக் கொண்டிருக்கின்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.


ஊழலுக்காகவே பெங்களூரு நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.


நாடே கேவலமாகப் பார்த்த கூவத்தூர் “கொண்டாட்டம்” மூலம் நடைபெறும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.


இந்த ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும்- குறிப்பாக “கமிஷன்” என்ற “கரன்சி மழையில்” குளிர் ஜூரம் வரும் அளவிற்கு நனைந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு .வேலுமணிக்கும் நேர்மையுடன்- நிர்வாகத் திறமையுடன் நல்லாட்சி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தோ, வெளிப்படையான நிர்வாகத்தை அளித்து “உள்ளாட்சியில் நல்லாட்சி கண்ட எங்கள் கழகத் தலைவர்” குறித்தோ விமர்சிக்க எவ்விதத் தார்மீக உரிமையும் அருகதையும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.