சென்னையில் ரவுடிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு காவல்நிலையத்தில் சரணடைந்தான். துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதால், உயிருக்கு பயந்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் இன்று காலை ரவுடி பினு சரணடைந்தான்.
சென்னையை அடுத்த சூளைமேட்டை சேர்ந்தவன் ரவுடி பினு. கேரள மாநிலத்தைச் பூர்விகமாக கொண்ட ரவுடி பினு மீது பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல்நிலையங்களில் 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஆட்கடத்தல், கட்ட பஞ்சாயத்து, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளிலும் தேடப்பட்டு வந்தவன் ரவுடி பினு.
இந்நிலையில், பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள ஒரு லாரி செட்டில் கடந்த வாரம் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இதற்காக சென்னை முழுவதும் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் பினு அழைப்பு விடுத்திருந்தான். அதனை ஏற்று பனுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் பங்கேற்றனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி பினு பிறந்தநாள் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினான்.
பின்னர் அனைத்து ரவுடிகளும் பினுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, மது அருந்திவிட்டு கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் போலீசார் அவர்கள் இருந்த அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அதில் 70 ரவுடிகளை கைது செய்தனர்.
அப்போது ரவுடி பினு, அவனது கூட்டாளிகள் 3 பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இதையடுத்து தலைமறைவான ரவுடி பினு உள்ளிட்டவர்களை 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் ரவுடி பினுவை சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை உயிருக்கு பயந்த ரவுடி பினு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தான். இதையடுத்து ரவுடி பினுவிடம் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.