தமிழகத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.06.2020 நள்ளிரவு 12.00 மணிவரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்க்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்களைத் தலங்களை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை (01/06/2020) முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும். அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது.
பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொதுபோக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். மண்டலங்களிடையே பயணிக்க இ- பாஸ் தேவையில்லை. வெளி மாநில பயணங்கள், மண்டலங்களிடையே சென்று வர இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30- ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில்களை இயக்குவதற்கான தடைகள் நீடிக்கிறது.
முதல் மண்டலத்தில் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகியவை உள்ளன. இரண்டாம் மண்டலத்தில் தருமபுரி,வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மூன்றாவது மண்டலத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. நான்காவது மண்டலத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஐந்தாவது மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. ஆறாவது மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. ஏழாவது மண்டலத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும், எட்டாவது மண்டலத்தில் காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளும் உள்ளன.
காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை இயங்கலாம். வாடகை டாக்சிகள் மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் இல்லாமல் இரு பயணிகள் வரை பயணம் செய்ய அனுமதி. வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது. ஜூன் 30- ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்கத் தடை தொடர்கிறது. கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்.
திரையங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார் கூட்ட அரங்குகளை திறக்க தடை தொடரும். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது; இறுதி நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம். 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியைப் பயன்படுத்தாமல் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், ஷோரூம்கள், பெரிய கடைகளைத் திறக்கலாம். வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் 8- ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரலாம். உணவகங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் இருந்தால் அவை இயக்கப்படக் கூடாது. தேநீர் கடைகளில் 50% அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். பொது இடங்கள், பணியிடங்கள், பயணத்தின்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். இ- காமர்ஸ் எனும் ஆன்லைன் விநியோக நிறுவனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் வழங்க அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லை பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சென்னை மாநகராட்சி அரசு முகாமில் தங்கும் ஏழைகள், முதியோர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணமாக வழங்கப்படும்."இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.