
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்ததாக சிப்காட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுவாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும் ஒட்டப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக தரப்பட்ட நிலம் ஒதுக்கீடு செய்தது ரத்து செய்யப்பட்டது. அதன்படி 2005, 2006, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலங்கள் ரத்து செய்யப்படுகின்றன.