Skip to main content

“பட்டியலினப் பெண்கள் முன்னேற சிறப்புத் திட்டம்” - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
Union Finance Minister Nirmala Sitharaman presented the budget at 2025-206

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-25) காலை தொடங்கியது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01-02-25) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக, நிதியமைச்சக நுழைவு வாயிலில் பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின், நிதியமைச்சக அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் பட்ஜெட்டை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிறகு, நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பேசிய அவர், “பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம். உலகின் பெரிய பொருளாதாரங்களிலேயே, வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம். உலகத்தின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் கூட்டணியாக புதிய திட்டம் அமைக்கப்படவுள்ளது. 

பட்ஜெட்டில் வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது. பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தேவையான அளவு பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அதிகரிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கவும், பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும் புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகியகால கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, அந்த அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். யூரியா உற்பத்தியை அதிகரிக்க அசாம் மாநிலத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும். கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். 

சிறு, குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன. அதன்படி, சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும். கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் கொண்டு வரப்படும். முதல்முறை தொழில் தொடங்கும் பட்டியலின பெண்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும். எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம் கொண்டு வரப்படும். சுயதொழில் மூலம் பட்டியலினப் பெண்கள் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்க சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்படும். புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காலணிகள் உற்பத்தியை பெருக்க திட்டம் கொண்டு வரப்படும். 

பொம்மைகள் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அளிக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு தேவையான கருவிகளின் உற்பத்திய ஊக்குவிக்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலம் 8 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம் செய்யப்படும். சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும். விவசாயம் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏ.ஐ தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும். ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். 

சார்ந்த செய்திகள்