Skip to main content

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு; உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்!

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
Tamil Nadu government case against the governor Argument in the Supreme Court

தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இத்தகைய சூலலில் தான், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தை சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். ஆனால், யு.ஜி.சி. பிரதிநிதியை விடுத்து மூன்று உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து தேடுதல் குழுவை சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சட்டவிதி இல்லாத நிலையில் தன்னிச்சையாக குழு அமைத்து அதை அரசாணையாக வெளியிட ஆளுநர் கூறுகிறார். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநரின் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (04.02.2025) நடைபெற்றது. நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “மசோதாவுக்கு ஒப்புதல், அரசாணைகளுக்கு ஒப்புதல் அளித்தல் தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விவகாரத்தில் எதுவும் நிலுவையில் இல்லை. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக மனு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.  யூ.ஜி.சி.க்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை” என வாதிடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி, “ஆளுநருக்கு பலமுறை அனுப்பப்பட்ட மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சட்டசபையால் மீண்டும் மசோதா திரும்ப அனுப்பப்பட்டால் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். இது விதிமுறை. ஆணால்  ஆளுநர்  இதனைச் செய்யவில்லை. முழுமையாகத் திரும்பி அனுப்பப்படும் மசோதா இயக்கம் சட்டமன்ற சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இரண்டு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். மற்றவற்றை தனித்தனியாகத் திரும்ப அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன”எனத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “ஆளுநர் 10 மசோதாக்களைத் திரும்ப அனுப்பி இருக்கக் கூடாது. ஆளுநர், தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தனர். தமிழக அரசு வாதிடுகையில், “பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சாசனப்படி ஆளுநர் நடந்துகொள்வதில்லை. ஆளுநர் தேவையா என்ற வாதங்கள் ஒருபக்கம் நடக்கிறது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள், “மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு தற்போது நாங்கள் என்ற நிவாரணம் வழங்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு வாதிடுகையில், “குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப் பட்டால் மத்திய அரசின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். அதேவேளையில், அரசியல் சாசன விதிமுறை 200ன் படி ஆளுநர் செயல்பட உத்தரவிட வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்